Thursday, September 27, 2007

பிரிவு

கிளைகள் உதிர்க்கும் இலைகள்
மரணத்தின் சாசனம் என்றிருந்தேன்
பின்புதான் புரிந்தது...
வசந்தம் பிறப்பதற்காக அவர்கள்
பிரிந்திருந்த காலம் அதுவென்று

அதுபோல்தான்...
எங்களுக்குள் இப்பொழுது
இலையுதிர் கால்ம்-இன்று
பட்டமரம் போல் நான்
காட்சியளித்தாலும் வசந்தம்
வருமென்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

வந்துவிடு என் தேவதையே!

Saturday, September 8, 2007

யார் தவறு..?

இறப்போம் என்று தெரியாமல்
பிறந்துவிட்டோம்-அது நம்
தவறல்ல
இறந்திடுவோம் என்று தெரிந்தும்
பெற்றுவிட்டார்கள் அது
அவர்களின் தவறும் இல்லை

அதுபோல்தான்....
நீ மறுப்பாய் என்று தெரியாமல்
காதலித்துவிட்டேன்-அது
உன் தவறல்ல
நீ மறுக்கிறாய் என்று தெரிந்தும்
காதலிக்கிறேன் -இதில்
என் தவறும் இல்லை

எல்லாம் காதலின் தவறு மட்டுமே?

Wednesday, September 5, 2007

காதலி அறியாத காதல்

ஒரு பூவிற்கு இன்று
பூச்சூடும் நாள்-அந்த
பூவையை வாழ்த்துகிறேன்
பூத்தூவி நான்

உன்னிடம்வாழ்க்கை
கேட்டு வரும் வேளையில்
என்னிடம் வாழ்த்தி
கூறிட நீ கேட்டாய்
உனக்கு
வாழ்த்து ஒன்று நான்
தந்து என் வாழ்க்கையை
கைவிட்டு நின்றேன்

இதயம் இரண்டு
ஒன்றாகும் வேளையில்
ஒரு இதயம்
இங்கு துண்டாகுதே…

கிளைவிட்டு பிரிந்து
சென்றிடும் இலைபோல்
என் காதல்
எனைவிட்டு பறந்து செல்கிறதே….

இலையே நீ
சருகாகும் முன்னே
என் இதயம்
எரிந்து சாம்பலாகிவிடும்….

என்றாவது ஒரு நாள்
உன் வீட்டு வாசலிலே
நான் ஒற்றை
ரோஜாவாக பூத்திருப்பேன்….

உந்தன் கேசத்தின்
வலதோரம் நீ எனை
சூடிடும் வேளையில்
பெண்ணே….
நீ அறியாத என் காதலை
அன்று உன்
செவியோரம் நான் கூறிடுவேன்!

இனி பொறுப்பதில்லை எரிதழல் எடுத்து வா!

சுற்றும் விழிகள் கொண்டு
திக்கெட்டும் பார்க்கிறேன்
தேடிச்சென்ற இடமெல்லாம்
தேவைகளின் ஆதிக்கம்

கட்டிய கரைவேட்டிகள்
காரிலே பறந்து செல்ல
ஒட்டிய வயிரோடு
உழைப்பவனோ தெருவோரத்திலே

நெஞ்சத்தில் நீதியோடு
இருக்க வேண்டியவர்கள்
மஞ்சத்தில் மங்கையை
தேடும் அவலம்

சிந்திய வேர்வைகளை
சேர்த்து வரியாய் கட்ட
முந்திச்சென்று
விழுங்குகிறதே
ஊழல் முதலைகள்

குருதியில் குளிக்கிறதே
மனித பூக்கள்
உதிரம் உறைகிறது-என்
மனதுக்குள்

திரும்பிய திசைகளெல்லாம்
எரிந்த சருகுகளாய்
சிரித்த முகங்கள்
சிதறிக் கிடக்கிறதே…
என்ன சொல்வேன்
வாங்கிய சுதந்திரம் இருட்டிளேயே இருக்கிறது

இனியும் பொறுப்பதில்லை
எரிதழல் எடுத்து வா
ஏற்றிடுவோம் புதிய
சுதந்திர தீபம்……!

அழுகின்ற இதழ்கள்……

வானவில்லின் ஒருவண்ணம் எடுத்து
சந்தனமும் தங்மும் ஒன்றாக கலந்து
பிரம்மன் செய்து வைத்த அச்சிலே
சிறந்ததை எடுத்து கலவையை ஊற்ற
நான் காதலிக்க உருவானாய் நீ

மல்லிகை மொட்டுகளை மலரவிட்டு
மாலையாக ஒன்றையொன்று சேர்த்து
உன் கருங்குழலில் சூடிய போது
மல்லிகையின் ம்ணம் கூடியது

மதி உதிக்கும் நேரமெல்லாம்
நதி போல உன் நினைவுகள்
என் சிறுநெஞ்சில் ஓடிவிளையாட-என்
சின்னச்சின்ன இன்பங்களை சொல்லத்தெரியவில்லை

விடிந்தால் மறைந்திடும் நிலவுபோல
விழித்தால் விலகிடும் கனவுலகில்
எத்தனை காலங்கள் வாழ்வதென்று
என்னை உன்னிடம் விற்றிட
இதயத்தை பேரம் பேசினேன்

முத்துப்பற்கள் வெளியே தெரியாமல்
சிறு செவ்விதழ்களை ஓரமாக சுழித்து
செல்லாக்காசு உன் இதயம் என்று
சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றாய்
அதுவரை நில்லாத என் இதயம்
அரை நிமிடம் நின்று துடித்தது

இணையாத தண்டவாளங்களின் வேதனை
என்னவென்று இப்பொழுது உணர்ந்து
இணைத்திட கிடத்தினேன் என்னை
இடைப்பட்ட பகுதியின் முழுவதும்
ஏற்றுக்கொள்ளாத புகைவண்டி
என் மீது தன் கால்கள் பதிக்க
என் உடல் பிரிந்த உயிர் போல்
மீண்டும் பிரிந்தது தண்டவாளம்

என்னை சுற்றி நிற்கும் கூட்டத்தில்
எனக்காகவும் சில கண்ணீர் துளிகள்
துளிகளில் ஒன்று என் விழிகளில் விழ
இறந்தும் என்னுள் ஏதோ மாற்றம்

அழுகின்ற இதழ்கள் அன்று சிரித்திருந்தால்..?

ஆகஸ்ட் 27

நேற்று மறைந்த அந்திமாலைச் சூரியன்
அதிகாலை ஐந்துமணிக்கு உதயமானது:
அதிக நேரம் உழைப்பதற்கு என்றெண்ணிய
வேளையில்தான் புரிந்தது-இன்று
தேதி பார்த்துவிட்டு வேகவேகமாய்
வந்துள்ளது உனக்கு வாழ்த்து சொல்வதற்கு

இரவு முழுவது காத்திருந்துவிட்டு
விடைபெறும் வேளையில் வாழ்த்துசொல்லிவிட்டு
ஓய்வெடுக்க ஓரமாக சென்றுகொண்டிருந்த
நிலவைப் பார்த்தபோது-கோபத்தால்
இளஞ்சிவப்பு….. சூரியனின் முகத்தில்

வாழ்த்து சொல்ல வழி தெரியாமல்
எப்படியும் பறிக்க வருவாயென்று-ரோஜா
இதழ்களில் படிந்திருந்தது பனித்துளிகள்

பூஞ்சோலைகள் தோறும் தேடிச்சென்று
சுகமான வாசங்களை சேகரித்துக்கொண்டு
வார்த்தையில் சொல்லத் தெரியாத வாழ்த்துக்களை…..
வாசங்களில் சொல்லி நின்றது தென்றல்

எல்லோரும் வாழ்த்துசொல்லிட என்ன
காரணம் என்றெண்ணிய போதுதான் உனக்கே
புரிந்தது உன் பிறந்த நாளென்று

விழிகளின் பிறந்த நாளை இமைகள் மறக்குமா-இதோ
என் வாழ்த்துக்களாய் இந்த கவிதை உனக்கு!

வெற்றியின் முதல்படி…..

காற்றோடு பேசும் இலைகளுக்கு தெரிவதில்லை
ஒரு நாள் காற்றே தம்மை கிழிக்குமென்று;

மலரோடு உறவாடும் வண்டுகளுக்கு தெரிவதில்லை….
ஒருநாள் மலரே தம்மைக்கொன்றுவிடுமென்று;

நிலவோடு காதலாகும் அல்லிக்கு தெரிவதில்லை
விடிந்தால் நிலவே தள்ளிச் சென்றுவிடுமென்று;

கிழிந்தாலும் அழிந்தாலும் பிரிந்தாலும்
இவைகள் வழக்கத்தை மட்டும் மாற்றுவதில்லை:

தோற்றுவிட்ட போதும் துவழாமல் மீண்டும்
விட்டுவிட்ட வாழ்க்கையை தொட்டுவிடதுடிக்கும்
இலைகளையும் வண்டுகளையும் மலர்களையும்
விடவா மனிதா நீ தாழ்ந்து விட்டாய்?

மீன் நீந்துவதையும் மனிதன் முயற்சியையும்
கற்றுத்தராமலேயே அறிய வேண்டியதல்லவா?

ஒருமுறை வாழ்வில் தோற்றுவிட்டால்
மறுமுறை வெற்றி இல்லையென்று
ஒருமுறையும் மனதில் எண்ணிவிடாதே
உன் மனதை நீயே கொன்றுவிடாதே…

அறிவாயோ மனிதா சிறுவாய்கொண்ட எறும்பும்
உறக்கம் கொள்வதில்லை ஒருநாளும்:
உறக்கம் இல்லா உயிரே உற்சாகமாய் உழைக்கையில்….
உனக்கு மட்டும்
ஏன் வந்தது முடக்கம்…?
தோல்வி என்பது காலைநேர பனிதானடா
துவண்டுவிடாதே முன்னிறுத்து முற்சியை சூரியனாய்….

தேசம் விட்டு தேசம் செல்லும் பறவையை பார்
சோகம் உன்னை விட்டுவிட்டு ஓடிவிடும்

சோகத்தில் தேகத்தை மூழ்க விட்டுவிட்டால்
யோகம் உன்னைத் தேடி வருவதில்லை
வெல்லும்வரை முயற்சியை மட்டும் முன்னிறுத்து….
சிறுஉளிதான் பெருமலையை உடைக்கிறது!

முடியும் என்னும் சொல்லை தன்னம்பிக்கையில் வைத்தால்
முடியாதென்று ஏதேனும் உண்டோ?

விழுந்துவிட்ட மழைத்துளி இறப்பதில்லை-அது
விண்ணைவிட்டு மண்ணில் குடியேறுவதுபோல்
நீ கண்ட தோல்வி தோல்வியல்ல-உன்
வெற்றிக்கு வழிகாட்டும் முதல் படிதான்!

நானும்… அவனும்..

செங்காடும் கரிசல்பூமியும்
கலந்திருக்கும் அழகான கிராமம்
சிமிழ்விளக்குகளும் சில்வண்டுகளும்
ஆக்கிரமித்துக்கொள்ளும் கிராமத்து இரவு

அறிந்த வயதில்தான் காதல் வருமென்றால்
அறியாத வயதிலேயே வருகிறது நட்பு
நட்பின் இலக்கணம் தெரியாமலேயே
நானும் அவனும் வாழ்ந்த
அழகான கிராமம் அது….

நாங்கள் வெண்சட்டை அணிந்த நாட்களைவிட
கிராமத்தின் மண்சட்டை அணிந்த
நாட்களே அதிகம்….

அடம்பிடித்து பள்ளிசெல்ல மறுத்து
அரசமர நிழலில் ஒளிந்திருந்த
நாட்கள் தான் எத்தனை எத்தனை…

கோகுலத்து கண்ணன் போல் பாவித்து
கோமாதா பின் சுற்றிய
நாட்கள்தான் எத்தனை எத்தனை…

அன்றொரு நாளும் இன்றொரு
நாளுமாய் சென்று வந்து அந்த
அரசுப் பள்ளியில் படித்து முடித்தோம்
எங்கள் ஆரம்ப காலத்தை…

கடிதம் எழுத கற்றுத்தருவதற்காக
காலம் எங்களை பிரித்தது
விடுதியில் நானும் வீட்டிலிருந்து அவனும்
வெவ்வேறு பள்ளிகளில் பிள்ளைகளாய்…

பிரிந்திருந்த நாட்களிளெல்லாம்
பிரிவினை அறியாமல் இருக்க
கடிதமே துணை….

பள்ளிக்கல்வி முடித்தபோது
ஏதேனும் பயிற்சி கல்வி
பயில்வதென்று நான் முடிவெடுத்தபோது
என்னைப்போல் அவனும் நான்காண்டு
தொழிற்கல்வியை தேர்ந்தெடுத்தான்

பருவத்தில் மாற்றம் படிக்கும்
கல்வி முறையில் மட்டுமா…
பாழாய்போன மனதிலும் தானே!

எதுவும் அறியாத சிறுவன் என்று
அவனை எண்ணியிருந்த என்னிடம் வந்து
தனக்கு வந்தது இடமாற்றம் மட்டுமல்ல
இதயமாற்றமும் என்று சொன்னான்

கண்ணோடு சேர்த்து கடிவாளம்
போட்டுவிட்டால் குதிரைக்கு திசை
ஒன்று மட்டும் தெரிவதுபோல
அவன் பாதை காதலை மட்டும் நோக்கி…

என் வாழ்க்கையோ ஏதோ எனக்கு
தெரிந்த தமிழில் கவிதைகளின்
துணையோடு சென்று கொண்டிருந்தது

காதல் வந்துவிட்டாலே…
மரக்கிளை இலைகளின் மழைத்துளிபோல்
கவிதை சொட்ட ஆரம்பித்துவிடுகிறது
ஏனோ இவன் மட்டும் அதில் விதிவிலக்கு
நண்பனாய் வாய்த்துவிட்டதால் என்
தலையெழுத்து அவனுக்கு எழுதித்தருவற்கு

அவள் சிணுங்களையும் சினத்தையும்
சில நேர மௌனத்தையும் சின்னப்
புன்னகையையும் சில்லென்று கேட்கும்
கொலுசொலியையும் சிறுபாதம் தாங்கும்
நிலத்தையும் கண்கள் பேசும்
மொழியையும் அவள்காற்றில் வரையும்
ஓவியத்தையும் தேகம் தாங்கும்
நிறத்தையும் தென்றலாய் நடக்கும்
நடையையும் இப்படி ஒவ்வொன்றாக
நாளொன்றும் கொண்டு வந்தான்
கவிதை எழுத கருவாக…

எல்லாம் எழுதித் தந்துவிட்டு அதை
என் படைப்பாக அச்சில் வடித்தபோதுதான்
வந்தது எனக்குத் தொல்லை-அதுபோல்
என் வாழ்வில் துன்பம் வேறில்லை

கிராமத்துக் காதலுக்கு வேண்டுமென்று
எழுதிக்கொடுத்தேன் அவன்சொல்லி-அது
என் நகரத்து நட்புக்கு
வைத்துவிட்டது முற்றுப்புள்ளி

ஆயிரம் நடந்த போதும்
நானும் அவனும் நண்பர்களே
ஆனால் நானும் …….?

என் கைக்கடிகாரம்

துடிப்புதான் வாழ்க்கையென்று
சொல்லிக்கொண்டிருக்கிறது
மனம் அறியும்
மௌன மொழியால்

அல்லி மலரும் நேரமென்றும்
வெள்ளி முளைக்கும் நேரமென்றும்
விண் விழிக்கும் நேரமென்றும்எ
த்தனை எத்தனையோ பிரிவுகள்
இருந்தும் எதுவும் அறியாமல்
இயக்கம் மட்டும் வட்டப்பாதையில்

ஆளப்பிறந்த அலெக்ஸாண்டர்
அவதிப்பட்ட இயேசு கிறிஸ்து
அகிம்சை என்று
சொல்லித்திரிந்த காந்தி-வெள்ளை
ஆணவம் அழித்திட்ட சுபாஷ்
எத்தனை எத்தனை தலைவர்கள்
எவ்வளவு சாதனைகள் அதிலும்
இழைக்கப்பட்ட வேதனைகள்
காலமெனும் பெயரில் அது
காத்து வரும் வரலாறுகள்தானே இவை

பொறுமை கற்றுத்தர சின்னமுள்
போதிய திட்டமிடலுக்கு பெரியமுள்
செயல்பாட்டின் வேகத்திற்கு நொடிமுள்
எத்தனை பெரிய செய்தியை
எவ்வளவு அடக்கமாக கூறுகிறது

எத்தகைய நிகழ்வுகள் இருந்தாலும்
என் கைக்கடிகாரம் துடிப்பதென்னவோ
அவளின் நினைவுகளை சுமந்துகொண்டுதான்!

ஆசையில் ஓர் கடிதம்

அன்புள்ள ……..க்கு
உண்மையை மட்டுமல்ல
உணர்வுகளையும் சொல்ல
ஒரு கடிதம்

குணம் மாறாமல் இருக்க
ம்ண்ணோடு சேர்த்து பிடுங்கி
நடப்படும் செடிபோல
எங்கெங்கோ இருந்து எடுத்து
நாம் நடப்பட்டோம்
அன்று கல்லூரிச்சோலையில்

கொட்டிவைத்த மணலில்
நட்டுவைத்த செடியில்
துளிர்விட்ட மலர்மொட்டுபோல்
நம் நெருக்கம் தொடங்கியது
சின்னப் புன்னகையால்

பிரிவென்றும்
முறிவென்றும் தெரியாது
புன்னகையும் எண்ணங்களும்
ஒன்று சேர்ந்து வார்த்தைகளின்
உதவியால் வளரத்தொடங்கியது
நாற்பத்தெட்டு மாதங்களிடையே
நம் வசந்த உறவு

ஆஹா!
அத்தனை அழகான உறவு-இன்று
கண்மூடும் பொழுதெல்லாம்
கனவிலும் நினைவிலும்
கண் நீரின் துணையோடு
நான் காணும் காட்சிகளாக
மட்டும்

எவர்கண் பட்டதென்று
தெரியவில்லை
இருவேறு துருவங்களாய்
இன்று எங்கெங்கோ
வாழ்கிறோம்

அக்கரையில்
நீ வாழ்கிறாயென்றால்
அக்கறையோடு அலைதாண்டியும்
வந்திடுவேன்
எக்கரை என்றே தெரியாதபோது
இக்கரையில் நிற்கிறேன்
நிற்கதியாய் நான்

முட்களுக்கு மத்தியில்
வளரும் ரோஜாபோல்
உன் நினைவுகளுக்கு
மத்தியில் இன்று நான்

தன்னை உருக்கி வெளிச்சம்
கொடுக்கும் மெழுகுபோல்
என்னை உருக்கி வாழ்கிறது
உன் நினைவுகள்

பெண்ணே!
உண்மையில் துடிக்கும் இதயம்
ஒவ்வொருவருக்கும் இரண்டு
ஒன்று துடிக்கையில் மற்றொன்று
ஓய்வில்…
எனக்கோ இரண்டும் ஓய்வில்
உன் நினைவுகளில் வாழ்வதனால்

நித்தமும் என்னைக் கொன்று
நிஜங்களைத் தின்று
நிழலிலும் நினைவிலும்
கடக்கின்றது
என்……..காலம்

கனவுகளும் கற்பனையும்
இல்லையென்றால் என்றோ
காலாவதியாயிருக்கும்
என் வாழ்வு

இது முகவரியில்லா கடிதம்
மட்டுமல்ல
வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வும்

முதல்வரிக்கு நீ
கொடுக்கும் தொடக்கமே முடிவு
இந்த கவிதைக்கும் வாழ்வுக்கும்
என் ……..யே!

என்னை விட மேலானதா?

யார் சொன்னது
சுவற்றில் பட்ட பந்துதான்
மீண்டும் மீண்டும்
திரும்பும் என்று
இதோ….
இங்கு நானிருக்கிறேன்
எத்தனைமுறை நீ
என்னை
உதாசினப்படுத்திய போதும்
என் மனது உன்
நினைவுகளை ஏந்திக்கொண்டு
உன் வாயிலில் காத்துநிற்கின்றது
காலை வணக்கம் சொல்வதற்காக
என்னை விடவா பந்து மேலானது?

எனக்கான உன் காதல்…..?

நாம் இருவரும் சேர்ந்திருந்த
கல்லூரி நாட்களில்-நான்
கண்ட கனவுகளெல்லாம்
என்னை மட்டும் காண்பித்திருந்தது
இருண்ட காட்சிகளாய்

பிரிவு நிரந்தரம் என்ற
நிதர்சன உண்மை
புரிந்தபோதுதான் தெரிந்தது
என் கனவு உன்னையும்
அழைத்து வந்து உன்னுடன்
காதலையும் குடிவைத்தது என்பது

விரல் தீண்டாமல்
விழிகளின் காட்சிப்பறிமாற்றம்தான்
காதலின் ஆரம்பம் எனில்
விழிகள் விழித்த நிலையில்
காணும் கனவுகளே
காதலின் ஆதாரம்

எனது ஆதாரம் உன்
நினைவுகளின் கரம்பிடித்து
எங்கோ ஒரு வழிப்பாதையில்
செல்கிறது…….
இணையாக பின்னே நீ வருவாயா என்றும்
இருவழிப்பாதையாக மாறினாலும்-பின்பு
எதிரே வந்து நீ துணையாக
வருவாயா என்றும் எதிர்பார்த்துக்கொண்டு
போகிறது தன்னந்தனியாக….

எனது காதல்
இன்றுவரை ஒருவழிப்பாதைதான்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடியும் முன்னோக்கினாலும்
எனது விழிகள் இருப்பதென்னவோ
எனது பின்புறம்தான்
தேவதை தேடிவருவாளா என்று

உயிலாக இருந்திருந்தால் உடனே
மாற்றி எழுதியிருப்பேன்
உயிராக சேர்ந்துவிட்டதனால்
செல்லும் இடமெங்கும் உடன்
எடுத்து செல்கிறேன்
இதயத்துடிப்புகளாக இருக்கும்
உன் நினைவுகளை

எத்தனை ஏக்கங்கள் எனக்குள்
இருந்தாலும் என்னை சிதைத்தாலும்
ஊமை கண்ட கனவு போல
என் காதல் எனக்குள்ளே

எதுவும் நீ அறியாத போதும்
எனக்கான உன் காதல்….?

என் காதலி….!

மரக்கிளைகள் தோரணம் கட்டி
தார்சாலை எங்கும் நீர்சாலையாக
மாற்றியிருந்த அழகான
மழைக்கால காலைநேரம்

மனிதர்கள் நடமாட மறந்த
தார்சாலையில் மரக்கிளைகள்
சேமித்த நீர்த்துளிகள்
இலைகளிடையே
சொட்டிக்கொண்டிருக்கின்றன
எனக்குள் சிந்திக்கொண்டிருக்கும்
உன் நினைவுகள் போல

யாருமில்லாத அந்தப் பாதையில்
யாரும் சேராது நான் சென்று
ஊரில் யாரும் மிதிக்கும் முன்னே
உதிர்ந்த பூக்களையெல்லாம்
பாவை உன்னைத் தொடுவதுபோல்
பட்டும் படாமல் சேகரித்தேன்
பூவை தாங்கும் பூவைக்காக

போதும் போதும் என்று நீ
சொல்லவேண்டுமென்பதற்காக
உன் பூக்கூடையை விட
பெரியதாகச் செய்ய சொன்ன
பூக்கூடையை தூக்கிக்கொண்டு
பொழுது புலரும் நேரத்தில்-உன்
வாசல் தேடி நான் வர
குழைசாய்ந்த வாழைமரம் போல்
தலைசாய்ந்து நீ
வெட்கமும் புன்னகையும் கலந்து
வாசலில் நின்றிருந்தாய்
கீழ்வானச் சூரியன் போல்

பட்டுக்கொள்ளுமோ
தொட்டுக்கொள்ளுமோ என்று
அறியாது வேகத்தில்
சட்டென்று கூடை இடமாற்றி
சிட்டொன்று பறப்பதுபோல்
பட்டென்று நீ ஓடிவிடுவாய்
பற்றியெரியும் என் இதயத்தையும்
சேர்த்து எடுத்துக்கொண்டு

நீர்சாலையையும்
தார்சாலயையும் காலைநேர
பூச்சாலையாய் ரசிக்க வைத்தது
தலையில் நீ சூடும் பூக்காடுதானே

தலைமுடியின் நிறத்தை உன்
தேகமெங்கும் நீ தாங்கினாலும்
தகனமிட்ட தங்கம் கூட
உன் முகலட்சணத்தின் முன்னே
கொஞ்சம் ஒளி குறையத்தான் செய்கிறது

உண்மையை சொல்ல வேண்டுமானால்
ஒவ்வொரு பெண்ணின் முகமும்
எப்படி அமைய வேண்டுமென்று
உன் முகம் காட்டும் உதாரணம்

எத்தனை பெண்கள் எதிரெதிரே
வந்த பொழுதும் எடுத்து
இடம் மாற்ற மனம் வராத
ஒரு முகம் உன் முகம்

உன்னை பேரழகி என்று
நான் சொல்லமாட்டேன்
உண்மையில்
நீதான் ஓர் அழகி

என்னை ஒருதலையாய்
காதல் செய்ய வைத்த-இந்த
கறுப்பழகிதான் என் காதலி!

கல்லூரி நட்பு

நான் போட்ட பூந்தோட்டம்
நாண்காண்டுகளாய் பூத்துக்குலுங்கியது;
என்னோடு பூத்திருந்த பூக்களெல்லாம்
இன்று புதுப்புது பாதைகளிலே போகிறதே..

காற்று மழை சாரலெல்லாம்
கலகலவென கண்களாலே வரவேற்று
நேற்றுவரை நெஞ்சத்தோடு
நீருடைய பூமி போல் சேர்ந்திருந்தோம்

இன்றோ மாற்று திசைகளெல்லாம் நம்மை
மனதார அழைக்கிறது- நாமிருக்கும்
நட்புலகை விட்டு வேற்றுலகிற்கு
வென்றிட வருக வென்று

நட்பை போற்றி பிரிந்திடுவொம்
நம்நட்பு நாளை இணைத்திடுமென்று;
பிரியாவிடை கொடு எனக்கு
என் பிரியமான தோழியே!

நட்பின் ஆழம்

ஒவ்வொரு நாளும்
தொடர்வண்டி பயணச்சீட்டு
எடுக்கும் வேளையெல்லாம்
நினைப்பதுண்டு
இன்றாவது உன்னை
சந்திக்கமாட்டோமா என்று

என்றாவது ஒருநாள்
நாம் சந்திக்கும் போது
நிற்க நேரமின்றி
பேசிக்கொள்ள வேண்டும்
இருவரில் ஒருவரேனும்

இல்லாதபோதும் தேடி
எடுத்த இரண்டு நிமிடத்தில்
இரண்டாண்டு நினைவுகளை
இரத்தின சுருக்கமாக
பரிமாற வேண்டும்

இரண்டாவது நிமிடத்தின்
கடைசி நொடியில்
உனது கைப்பையில்
தேடியும் கிடைக்காத காகிதத்தால்
என்றாவது இதுபோல்
பயன்பெற வேண்டுமென்று
எனது பையில் சேகரித்த
பயணசீட்டில்
பரிமாறிக்கொள்ள வேண்டும்
ஒருவரின் தொடர்புக்காண
எண்ணை மட்டும்

எனது விருப்பமெல்லாம்
இதுதான்…..
கேட்பது நீயாக இருக்க வேண்டும்
கொடுப்பது நானாக இருக்க வேண்டும்
அப்பொழுதுதான்
உன் மீதான
என் நட்பின்
ஆழம் அறியப்படும் !

எனது கேள்வி…!

பொழுதுபோக்காக ஒரு வகுப்பு நேரத்தில்
பொதுவான விசயம் பேசுவதென்று
எல்லோரும் முடிவு செய்து
ஒருதலைப்பு தரப்பட்டது… அது காதல்
அதிலும் ஆண்களுக்கு காதலி

முதலில் யார் பேசுவதென்று
விவாதம் நடந்தபோது
நான் பேசவேண்டுமென்று
என்னை நீ மேடையேற்றினாய்
என் காதலி நீதான் என்று தெரியாமல்

என்னை மேடையேற்றிவிட்டு
என் கண்ணை குறை சொல்கிறாய்
உன்னை மட்டும் பார்க்கிறதென்று
என்ன செய்வது….
பூவைத் தேடித்தானே வண்டு வரும்

என்னைப்பற்றி பேச சொல்லியிருந்தால்
என்ன பேசுவதென்று ஏதாவது யோசித்திருப்பேன்
உன்னைபற்றி பேசச்சொன்னதால்
ஒரு நிமிடமும் தயங்கவில்லை
யோசனையில் எப்பொழுதும் நீதானே

கவிதை இல்லாமல் காதலா
கவிதையாய் உரையைத் தொடங்கினேன்

கன்னி அவள் கூந்தல் கண்டு
காரிருள் வந்து கடன் கேட்கிறது
தனக்கு கருமை காணாதென்று
முதுகை தொட்டுவிட்டாலே கூந்தல்
முழுவளர்ச்சி கண்டதென்று
மகிழும் பெண்கள் மத்தியில்
இடைதாண்டி தொடை தொடுவோமா
வேண்டாமா என்றிருக்கும் அவள்கூந்தல் கண்ட போது
கன்னியர் மத்தியிலும் சிறு கலக்கம்தான்

தென்றல் வேண்டுமெனில் அவள்
இமையை இமைக்க சொல்லலாம்

திங்களின் இரு பிறப்பாம்
பௌர்ணமியும் அமாவாசையும்
அவள் கண்களில் சங்கமம்
கறுப்பும் வெள்ளையுமாய்

இதழ்களுக்கிடையே போட்டி
நீ மெலிதா நான் மெலிதாவென்று
இறுதியில் ரோஜா தோற்றுப்போகிறது
இப்படியும் இதழ்கள் இருக்குமாவென்று

நடை நடக்கும்போது
இடம் வலம் சென்றுவரும் இடை
இருவிரலுக்குள் அடங்குவதில் இல்லை தடை

எல்லோரும் நடக்கும் போது
எதுவும் பேசாத மண் -உன்
பாதம் படும் வேளையில் மட்டும்
பேசுகிறது இங்கேயே நிற்கக்கூடாதாவென்று
மலரைத் தாங்குவதற்கு
யாருக்குத்தான் மனம் வராது

மழைத்துளிகள் மட்டும் வருந்துவதுண்டு
உன் மீது விழ முடியாமல்
குடைகள் தடுப்பதனால்

இப்படியாக என் காதலியை
நான் வர்ணிப்பதாக நீ
இமை தட்டாது இதழ் புன்னகையால்
ரசித்துக்கொண்டிருந்தாய்
என் காதலியே நீதான் என்று தெரியாமல்

எனது கேள்வியெல்லாம் இதுதான்
என் காதலி நீதான் என்று தெரியும்போது
இதழ்களில் இந்த புன்னகை
தேங்கி நிற்குமா என்பதுதான்….?

நட்பும்…..காதலும்…..

நகர்ந்துவிட்ட நாட்கள் அது:

நனைந்துவிட்ட இலவம் பஞ்சை
பிழிகையில் வடிகின்ற நீர்த்துளிபோல்
இன்று என்னுள் சொட்டிக்கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்…..

நான்காண்டு நம் கல்லூரி வாழ்வில்
ஓராண்டு முடிந்த பின்புதான்
நம் நட்பின் அரங்கேற்றம் வந்தது
அதுவரை நடந்ததெல்லாம்
அரங்கேற்றத்திற்கான பயிற்சிகள் போலும்

எத்தனைமுறை நான் அழைத்தபோதும்
அத்தனைமுறையும் தொலைபேசியின் வழியே
உன் குரல் என் காதில் இனிமையாய்…
சடசடவென்று சத்தம் கொடுத்தபோதும்
ஜன்னலோர மழைத்துளியின் சுகம்போல்

ஆண்டுதோறும் வரும் என் உதய நாளுக்கு
அன்னையையும் அழைத்து சென்று
அழகான நினைவுப்பரிசு ஒன்று வாங்கினாலும்
இல்லம் தேடிவந்து
நான் வாங்கவேண்டுமென்று
செல்லமாய் எனக்கு உத்தரவிடுவாய்

எனக்கு முதல் மாதம் உனக்கு வந்த
உன் வாழ்வின் சிறந்த நாளாம்
உன் பிறந்த நாளில்
உன் அன்னையின் கைச்சுவை
நான் கண்டிருந்ததால்
அன்பின்சுவை தேடி என் கால்கள்
வந்துநிற்கும் என் பிறந்தநாளில்
உன் பிறந்தகத்தில்…

நிமிர்ந்து பார்த்த ஆகாயத்தை
சாய்ந்து பார்த்த போதும்
அதன் எல்லை தெரியாதது போல
எத்தனை எத்தனையோ நம் நினைவுகள்
ஏட்டில் எழுத முடியாமல் என்னுள்

எல்லாம் நகர்ந்துவிட்ட நாட்கள் அது:

அலைகள் வந்து விட்டுசென்ற
கரையில் தவிக்கும் நுரைகள்போல்
நட்பலையில் உருவான காதல்
இன்று என் கரையில் தவிக்கிறது

நமக்குள் நட்பும் எனக்குள்
காதலும்….
இன்று விதியின் விளையாட்டில்!

ஒரு ஈழத்து மனைவி

களம் கண்டு சென்றுவிட்ட காதலன்
கட்டிய மஞ்சள் கயிற்றில்
இன்னும் ஈரம் காயவில்லை…

தேசத்தின் விடுதலைக்காக தேகத்தை
பணயம் வைத்து நீ சென்றிருக்கிறாய்
இந்த தேசப்பிறவி என்பதால்
எனக்குப் பெறுமைதான்- இருந்தும்
மனதின் ஏக்கங்கள் மட்டும்
என்னை மரக்கரையான்களாய் அரிக்கின்றன

சதைப்பிண்டங்களையும் கை கால்
துண்டுகளையும் கண்டு கொண்டிருக்கும்
உனக்கு என் ஞாபகம் என்பது
எதிர்பார்க்கக்கூடாத ஒன்றுதான்

தோட்டாக்கள் உமிழும் துப்பாக்கிகள்
ஒருவேளை தோகைமயிலின் இறகுகளை
உமிழ்ந்தால் உனக்கு என் ஞாபகம்
வருவதற்கு வாய்ப்பு உண்டு
போர்க்களத்தில் எங்கே பூக்களை காண்பது

எப்பொழுதும் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்க
எங்கள் ஈழம் இரங்களின் கூடம் போலும்:?

ஈழத்தில் எல்லோருக்கும் இறுதி ஊர்வலம்
அரசு மரியாதை போல்தான்-இங்கு
எப்பொழுதும் ஒலித்துகொண்டிருப்பது
துப்பாக்கிகள் மட்டும் தானே

நான் முந்தும் போது உன்
துப்பாக்கி எனக்காக ஒலிக்கட்டும்
நீ முந்தும் போது நமக்காக
இந்த தேசத்தின் துப்பாக்கி ஒலிக்கட்டும்

-அமைதிப்ரியன்