Wednesday, April 30, 2008

இன்றாவது வேலை கிடைக்குமா..?

எனை ஈன்ற என் அன்னை
கருவறை வாழ்விலேயே என்னை
கலைத்திருக்கலாம்..

எல்லோரும் போல் தன்பிள்ளையும்
வளமாக வாழ்ந்திட வேண்டும் என்று
கனவுகள் வளர்த்தாள்-கனவுகள்
நனவாக்கிட எனை இப்பூமியில் பிரசவித்தாள்

என் பசியை அவள் வயிற்றில் உணர்ந்து
என்னை கண்போல காத்து நின்றாள்
கல்வியை காணாத அவள்-என்
கைப்பிடித்து கல்விக்கூடம் அழைத்து சென்று
தன் கண் குளிர எனைப்பார்த்து ரசித்தாள்

இன்றோ.. அன்னை தேசம் என்னைத்தாங்கும்
என்ற நம்பிக்கையில் அவள் அறிந்தே
இராத ஊருக்கு வேலை தேடி
அனுப்பிவைத்தாள் என்னை சுமந்த அன்னை

இங்கு பத்துக்குபத்து அறையில்
பலரில் ஒருவராய் தங்கி
அடி எடுத்துவைத்து நாள்தோறும்
அளந்து கொண்டிருக்கிறேன்
ஒவ்வொறு தெருவாய்-இன்றாவது
வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டிருக்கும்
என் கால் செருப்பினைப்போல -என்
நம்பிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது

தகுதிகள் எல்லாம் இருந்தும்
பகுதியில் கூட வேலை செய்ய
தாயாராய் இருந்தும்-பணி
கிடைப்பது மட்டும் கானல் நீராய்

இன்று நான் எத்தனை முறை
எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை
என் பசி மதிப்பிடுவதில்லை
என் பையில் இருக்கும் பணம் தான் மதிப்பிடுகிறது..
மழைவிட்டபிறகும் நீர்த்துளிகள்
மரக்கிளையில் சொட்டிக்கொண்டிருப்பதைப்போல
என் அன்னையவளின் பராமரிப்பு நினைவுகள்
இப்பொழுதும் எனக்குள் சொட்டிக்கொண்டிருக்கின்றன..!

இதற்கிடையில்..
இன்னுமா என்னை நம்பிக்கொண்டு
இங்கு இருக்கிறாய் என்று
நான் பெற்ற பட்டம் என்னப்பார்த்து
பல்லைக் காட்டுகிறது..?

இப்பொழுது சொல்லுங்கள்
எனை ஈன்ற என் அன்னை
கருவறை வாழ்விலேயே என்னை
கலைத்திருக்கலாம்தானே....?