Friday, November 30, 2007

காதல் என்ன பாவமா..?

இதழ் பிரியாமல் இதழ் மலர்ந்து
சின்னப்புன்னகையால் என்ன நடந்திடுமென்று
எதுவும் தெரியாமல் இருவரும்
சிரித்து வைத்தோம் சின்னப்
புன்னகைதானே என்று

முதல் புன்னகை முதல் வார்த்தையாய்
மாறியபோது தெரிந்திருக்கவில்லை
முடிவில்லா துன்பத்தின் மூலதனம்
இதுவென்று...
வார்த்தை ஒன்று வார்த்தைகளாகி
வாழும் நாளும் வலுப்பெற்று
வந்ததென்றும் சென்றதென்றும் ஏதேதோ
பேசத்தொடங்கிவிட்டோம்
வளர்ந்துவிட்ட நட்புதான் காரணமென்று

நட்பும் ஓர் ஆழ்கடல் என்று தெரியாமல்
மூழ்கிவிட்டோம் முத்துக்குளிப்பதுபோல்
எதையோ பற்றிக்கொண்டு இருவரும்
வெளிவந்துவிட்டோம்...
பற்றியது எதுவென்று பார்த்தபோது
உன்கையில் நட்பின் மறுஉருவம்
என்கையில் காதலின் முழுஉருவம்

உன் கண்ணைக்கண்டு அதில்
என்னைக் கண்டு நான்
காதல் கொண்டேன்-நீயோ
என்னைத் தின்று இருவிழியால்
கொன்று இதழ் மௌனம்
கொண்டாய் அன்று முதல்

காதல் என்ன அவ்வளவு பாவமா...?

Monday, November 5, 2007

விதைக்கப்பட்ட வீரன்!

புற்களம் எல்லாம் போற்களமாய் மாறி
புத்தன் பூமி இன்று இரத்த பூமியாய்
நித்தம் நித்தம் நிம்மதியின்றி வேகிறது
தமிழரினம் பல நித்திரையிலேயே சாகிறது

முற்போக்கு சிந்தனையில்லா மூடர்களிடமிருந்து
தற்காப்பு வேண்டும் என்றுதான்
தமிழரினம் நிற்காது போராடுகிறது
தமிழ்தேசம் வேண்டுமென்று வாதாடுகிறது

மக்களை எல்லாம் மாக்களாய் கொன்று
சிக்கலை வளர்க்கும் சிங்கள கூட்டம்
செந்தமிழ் எடுத்து வளர்த்த தமிழ்
செல்வன் ஒருவனை இன்று
சிதைத்துவிட்டது சினம் கொண்டு

வட்டமிடும் கழுகுகள் கூட்டம் ஒன்று
வஞ்சினம் உள்மனதில் கொண்டு
திட்டமிட்டு செய்துவிட்ட செயலால்
மட்டற்ற சோகம் இன்று
தமிழர்தம் மனதை ஆள்கிறது நின்று

என் செந்தமிழ் செல்வன் அவன்
சிதைக்கப்படவில்லை...
சுதந்திரப் பூக்கள் கொடுக்க வேண்டிய
வேர்கள் விருட்சமாய் வளர வேண்டுமென்று
வீசி எறியப்படும் உரமாய்
விதைக்கப்பட்டிருக்கிறான்!

amaithipriyan@gmail.com